11/19/07

எடியூரப்பா

ஏழுநாள் ஆட்சில என்னத்தக் கண்டீக
பாழும் பதவிக்கா பித்தாட்டம் நின்னீக
ஆனமட்டும் லாபம் அரசாங்கக் காரு
போனதோ பாஜக பேரு

நவசக்தி விநாயகர்

இன்று காலை மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தோம். நல்ல தரிசனம். அப்பொழுது தோன்றிய கவிதை இங்கே. பல முறை யோசித்தும் நான்கு வரி கவிதை ஆக்குவதற்கு முதல் இரண்டு வரிகள் சரியாக அமையவில்லை. எனவே தோன்றிய இரண்டு வரிகளைக் கொண்டு குறள் வெண்பாவாக எழுதியுள்ளேன். முதல் இரண்டு அடி உங்களுக்குத் தோன்றினால் பின்னூட்டத்தில் கொடுக்கவும்.

கவிதை இதோ:

தவசக்தி வித்யை பெறவே தொழுதேன்
நவசக்தி நாயகன் தாள்.

11/18/07

வெண்பா

இன்று என்னுடைய உறவினன் ஒருவனிடம் கூகிளிள் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய கவிதைக்கு வாழ்த்து தெரிவித்து, வெண்பா அருமை என்று கூறினான். பின்னர் அவனிடம் என்னடைய கவிதையில் கடைசி அடியில் நான்கு சீர் இருப்பதையும், வெண்பாவின் மற்ற இலக்கணங்களாகிய மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நிரை ஆகியவற்றை என்னுடைய கவிதை பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். இந்த இலக்கணங்களைப் பின்பற்றி இதே கவிதையை மாற்றுவதாகவும் அவனிடம் சொன்னேன்.

வெண்பா இலக்கணம் வேண்டின் - தமிழ் விக்கிபீடியாவில் சென்று வெண்பா என்று தேடவும். இந்த பதிவிற்காக தேடியதில் இங்கு என்னுடைய வெண்பா அறிவைப் பெருக்கிக்கொள்ள முடிந்தது.

இரண்டாவது அடியில் தனிச்சொல் வராததால் இன்னிசை வெண்பாவாகவே என்னுடைய கவிதை வரும்.

இதோ அந்த வெண்பா :

வெடியதன் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான்
இடியதன் பேரொலியைக் கேட்டாலும் அஞ்சான்பின்
அஞ்சும் பொருளொன்று உண்டென்றால் அன்னைதான்
வஞ்சித்தே ஊட்டும் மருந்து

இலக்கணம் (நான் சரி பார்க்க எழுதியது - இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்):

வெடியதன் - நிரை நிரை - கருவிளம்
வேகத்தைக் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
கண்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
இடியதன் - நிரை நிரை - கருவிளம் - மா முன் நிரை
பேரொலியைக் - நேர் நிரை நேர் - கூவிள்ங்காய் - விளம் முன் நேர்
கேட்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான்பின் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
பொருளொன்று - நிரை நேர் நேர் - புளிமாங்காய் - மா முன் நிரை
உண்டென்றால் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அன்னைதான் - நேர் நேர் நேர்- தேமாங்காய் - காய் முன் நேர்
வஞ்சித்தே - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
ஊட்டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
மருந்து - நிரைபு - பிறப்பு - மா முன் நிறை.

11/8/07

அஞ்சுவது அஞ்சல்

என்னுடைய தமிழ் பதிவை நான் இரு தினங்களுக்கு முன் என் மகன் சுகோஷ் பற்றி எழுதிய கவிதையைக் கொண்டு துவக்குகிறேன். நிறை-குறைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

வெடியின் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான் - பேர்
இடியின் ஒலியைக் கேட்டாலும் அஞ்சான் - இவன்
அஞ்சும் பொருளொன்று அவனியில் உண்டென்றால்
வஞ்சித்தே அன்னையூட்டும் அரைமூடி மருந்து.