11/18/07

வெண்பா

இன்று என்னுடைய உறவினன் ஒருவனிடம் கூகிளிள் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய கவிதைக்கு வாழ்த்து தெரிவித்து, வெண்பா அருமை என்று கூறினான். பின்னர் அவனிடம் என்னடைய கவிதையில் கடைசி அடியில் நான்கு சீர் இருப்பதையும், வெண்பாவின் மற்ற இலக்கணங்களாகிய மா முன் நிரை, விளம் முன் நேர், காய் முன் நிரை ஆகியவற்றை என்னுடைய கவிதை பின்பற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன். இந்த இலக்கணங்களைப் பின்பற்றி இதே கவிதையை மாற்றுவதாகவும் அவனிடம் சொன்னேன்.

வெண்பா இலக்கணம் வேண்டின் - தமிழ் விக்கிபீடியாவில் சென்று வெண்பா என்று தேடவும். இந்த பதிவிற்காக தேடியதில் இங்கு என்னுடைய வெண்பா அறிவைப் பெருக்கிக்கொள்ள முடிந்தது.

இரண்டாவது அடியில் தனிச்சொல் வராததால் இன்னிசை வெண்பாவாகவே என்னுடைய கவிதை வரும்.

இதோ அந்த வெண்பா :

வெடியதன் வேகத்தைக் கண்டாலும் அஞ்சான்
இடியதன் பேரொலியைக் கேட்டாலும் அஞ்சான்பின்
அஞ்சும் பொருளொன்று உண்டென்றால் அன்னைதான்
வஞ்சித்தே ஊட்டும் மருந்து

இலக்கணம் (நான் சரி பார்க்க எழுதியது - இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்):

வெடியதன் - நிரை நிரை - கருவிளம்
வேகத்தைக் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - விளம் முன் நேர்
கண்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
இடியதன் - நிரை நிரை - கருவிளம் - மா முன் நிரை
பேரொலியைக் - நேர் நிரை நேர் - கூவிள்ங்காய் - விளம் முன் நேர்
கேட்டாலும் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சான்பின் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அஞ்சும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
பொருளொன்று - நிரை நேர் நேர் - புளிமாங்காய் - மா முன் நிரை
உண்டென்றால் - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
அன்னைதான் - நேர் நேர் நேர்- தேமாங்காய் - காய் முன் நேர்
வஞ்சித்தே - நேர் நேர் நேர் - தேமாங்காய் - காய் முன் நேர்
ஊட்டும் - நேர் நேர் - தேமா - காய் முன் நேர்
மருந்து - நிரைபு - பிறப்பு - மா முன் நிறை.

1 comment:

Narayanasami Vijayaraghavan said...

உன் சாதாரண கவிதையையும் வெண்பாவாக மாற்றப்பட்ட கவிதையையும் ஒப்பிடும்போது, வெண்பா நடை படிக்க எளிதாக, சுவையாக இருப்பது தெரிகிறது. பாடல் கட கட கட வென ஓடுகிறது. ஆக, இலக்கணம் என்பது மொழியின் யாப்புக்கு ஒரு 'வாஸ்து சாஸ்திரம்' என்பது புரிகிறது. இன்று தான் நான் இலக்கணத்தின் அவசியத்தை முழுமையாக‌ப் புரிந்துகொண்டேன்.

வி. நாராயணசாமி