5/28/10

மஹதி

சலங்கையின் ஜல்ஜல் சொல்லுமே ஷட்ஜமம்
ரீங்காரமாய் ஒலிக்கும்உன் அழுகை ரிஷபம்
கலகலவென சிரிக்கையில் கேட்குமே காந்தாரம்
மழலையில் உதிர்த்திடும் முத்துக்கள் மத்யமம்
பாதங்கள் பூமியில்படப் பாடுமே பஞ்சமம்
தைதையென துள்ளிகுதித் தாடையில் தைவதம்
நித்திரையில் மெல்லியதாய் நின்சுவாசம் நிஷாதம்
மொத்தத்தில்நீ நாரதன்கை வீணையின் நாதம்

பி.கு
1. நாரதரின் வீணையின் பெயர் மஹதி
2. ஷட்ஜமம் முதல் நிஷாதம் என்பவை ஸரிகமபதநி என்ற ஸ்வரங்களின் பெயர்களாகும்.

சுகோஷ்

சுகோஷ் பிறந்த சில நாட்களில் எழுதிய கவிதை இது.

வேய்குழல் கீதத்தை வீணையின் நாதத்தை - உன்
வாய்மொழி அமுதத்தால் வெட்கிட வைத்தாயே
பூரணமாய் குறள் மொழியை மெய்ப்பிக்க வந்தாயே
காரணப் பெயரதனால் குரலினியன் என்னும் சுகோஷ்

5/13/10

முப்பத்தி ஏழு, மேட்டுத் தெரு, துறையூர்

மே 8 மற்றும் 9 2010 அன்று, துறையூர் மேட்டுத் தெருவில் உள்ள எங்களின் வீட்டை எங்கள் கொள்ளுத் தாத்தா வாங்கி நூறு ஆண்டுகள் ஆகியதை வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். அன்றைய தினம் நான் எழுதிய கவிதை இதோ:

முப்பத்தோ றாண்டுகளாய் இன்பத்தின் முகவரி
முப்பத்தி ஏழு மேட்டுத் தெரு - அதன்
நூற்றாண்டு காணும் நன்னாளில் மனம்
காற்றாய் பறக்குது பின்னோக்கி

*துறையூர் என்றதும் நினைவில் வருவோர்
குறைதீர நவமியில் உதித்த ராமரும்
உத்திரப் பங்குனி சுப்பிர மணியரும்
இவ்விரு நாமங்கள்சேர் நாமகிரி நாயகரும்

தெய்வத் தம்பதியர் காட்டிய பாதையில்
எய்திட இலக்குகள் எண்ணிலும் அடங்குமோ?

பக்தியும் ஒழுக்கமும் புத்தகத்து வார்த்தையல்ல
நித்தமும் வாழ்வினை நடத்துகின்ற வழியென
சொற்களால் அன்றி தம் செய்கையால் காட்டிடும்
சுற்றங்கள் நிறைந்ததால் வீடல்ல கோவிலிது

மொட்டை மாடியில் கற்றோம் கிரிக்கெட்
கூட்டல் கழித்தல் ஐஓபி கிளைகளில்
அஞ்சாமல் நீச்சல் சுரைகுடிக்கை இடுப்பில்
சிந்தாமல் பறிமாற சீதாகல்யாணப் பந்தி
குடத்தில் தண்ணீர் கொணர்ந்து பழக்கம்
நடனப் பயிற்ச்சிக்கு திவ்ய நாமம்
கத்திப் பேசவும் கொண்டோம் வழக்கம்
மொத்தத்தில் இதுஒரு பல்கலைக் கழகம்

வீடல்ல இதுஒரு ஆல விருட்சம்
வேர்களின் வயதின்றி நூறு வருஷம்
விழுதகளாம் நாங்கள் ஓர்உறுதி எடுப்போம்
வேர்சென்ற பாதையைத் தொடர்ந்து நடப்போம்.


* - எங்கள் தாத்தா, பாட்டி - ராமசுப்பிரமணிய ஐயர் மற்றும் நாமகிரி அம்மாள் - 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தில் ராமநவமி உற்சவமும், பங்குனி உத்திர உத்சவமும் நடத்தினர்.