5/28/10

மஹதி

சலங்கையின் ஜல்ஜல் சொல்லுமே ஷட்ஜமம்
ரீங்காரமாய் ஒலிக்கும்உன் அழுகை ரிஷபம்
கலகலவென சிரிக்கையில் கேட்குமே காந்தாரம்
மழலையில் உதிர்த்திடும் முத்துக்கள் மத்யமம்
பாதங்கள் பூமியில்படப் பாடுமே பஞ்சமம்
தைதையென துள்ளிகுதித் தாடையில் தைவதம்
நித்திரையில் மெல்லியதாய் நின்சுவாசம் நிஷாதம்
மொத்தத்தில்நீ நாரதன்கை வீணையின் நாதம்

பி.கு
1. நாரதரின் வீணையின் பெயர் மஹதி
2. ஷட்ஜமம் முதல் நிஷாதம் என்பவை ஸரிகமபதநி என்ற ஸ்வரங்களின் பெயர்களாகும்.

சுகோஷ்

சுகோஷ் பிறந்த சில நாட்களில் எழுதிய கவிதை இது.

வேய்குழல் கீதத்தை வீணையின் நாதத்தை - உன்
வாய்மொழி அமுதத்தால் வெட்கிட வைத்தாயே
பூரணமாய் குறள் மொழியை மெய்ப்பிக்க வந்தாயே
காரணப் பெயரதனால் குரலினியன் என்னும் சுகோஷ்

5/13/10

முப்பத்தி ஏழு, மேட்டுத் தெரு, துறையூர்

மே 8 மற்றும் 9 2010 அன்று, துறையூர் மேட்டுத் தெருவில் உள்ள எங்களின் வீட்டை எங்கள் கொள்ளுத் தாத்தா வாங்கி நூறு ஆண்டுகள் ஆகியதை வெகு விமரிசையாகக் கொண்டாடினோம். அன்றைய தினம் நான் எழுதிய கவிதை இதோ:

முப்பத்தோ றாண்டுகளாய் இன்பத்தின் முகவரி
முப்பத்தி ஏழு மேட்டுத் தெரு - அதன்
நூற்றாண்டு காணும் நன்னாளில் மனம்
காற்றாய் பறக்குது பின்னோக்கி

*துறையூர் என்றதும் நினைவில் வருவோர்
குறைதீர நவமியில் உதித்த ராமரும்
உத்திரப் பங்குனி சுப்பிர மணியரும்
இவ்விரு நாமங்கள்சேர் நாமகிரி நாயகரும்

தெய்வத் தம்பதியர் காட்டிய பாதையில்
எய்திட இலக்குகள் எண்ணிலும் அடங்குமோ?

பக்தியும் ஒழுக்கமும் புத்தகத்து வார்த்தையல்ல
நித்தமும் வாழ்வினை நடத்துகின்ற வழியென
சொற்களால் அன்றி தம் செய்கையால் காட்டிடும்
சுற்றங்கள் நிறைந்ததால் வீடல்ல கோவிலிது

மொட்டை மாடியில் கற்றோம் கிரிக்கெட்
கூட்டல் கழித்தல் ஐஓபி கிளைகளில்
அஞ்சாமல் நீச்சல் சுரைகுடிக்கை இடுப்பில்
சிந்தாமல் பறிமாற சீதாகல்யாணப் பந்தி
குடத்தில் தண்ணீர் கொணர்ந்து பழக்கம்
நடனப் பயிற்ச்சிக்கு திவ்ய நாமம்
கத்திப் பேசவும் கொண்டோம் வழக்கம்
மொத்தத்தில் இதுஒரு பல்கலைக் கழகம்

வீடல்ல இதுஒரு ஆல விருட்சம்
வேர்களின் வயதின்றி நூறு வருஷம்
விழுதகளாம் நாங்கள் ஓர்உறுதி எடுப்போம்
வேர்சென்ற பாதையைத் தொடர்ந்து நடப்போம்.


* - எங்கள் தாத்தா, பாட்டி - ராமசுப்பிரமணிய ஐயர் மற்றும் நாமகிரி அம்மாள் - 25 ஆண்டுகளாக இந்த இல்லத்தில் ராமநவமி உற்சவமும், பங்குனி உத்திர உத்சவமும் நடத்தினர்.

6/22/08

அப்பா

அதிசூர விநாயகர் அருள்கின்ற செங்கோட்டைப்
பதிவாழ் குளத்தையர் கோமதி தம்பதியர்
துதித்தார்கள் தெய்வத்தை பிள்ளை வரம்வேண்டி
உதித்தாரே உத்தமர்தான் ஆவணி அசுவதியில்

பூரணமாய் செல்வம் மணியான உள்ளம்
காரணமாய் வைத்தனரே ராஜாமணி நாமம்
வேலிபோல் மக்களைக் காக்கின்ற குணமறிந்தே
சாலிவா டீஸ்வரன் என்றழைத்து மகிழ்ந்தனரே

நடுநிசி ஆனாலும் பேரன் எதுகேட்பின்
சடுதியில் செய்துதரும் பாசமுள்ள பாட்டியுண்டு
அதிகாலை எழுந்து ஆலயம் சென்று
துதிபாடி மகிழும் நண்பர்கள் கூட்டமுண்டு

தந்தையும் அவரிரு தமையனும் சேர்ந்து
சொந்தமாய் செய்தனர் ஹோட்டல் வியாபாரம்
எழில்மிகு சேரநாட்டு செங்கோட்டையில் குடும்பம்
தொழிலோ பாண்டிநாட்டு சோழவந்தான் நகரம்

பதினைந்து வயதுவரை கவலையைக் கண்டதில்லை
விதியதன் விளையாட்டை வென்றவர் யாருமில்லை
எந்தஓர் தொழிலும் எடுபடாது குடும்பமே
சொந்த ஊர்விட்டு சோழவந்தான் சென்றதே

உணவகம் தொடங்கினர் கணேஷ பவனென்று
பணவரத்து ஆனால் முன்போல் இருக்கவில்லை
தந்தையின் பாரத்தை ஏற்கவே தனையனும்
அந்தசிறு வயதிலும் சிறிதும் தயங்கவில்லை

நெடுஞ்சாலைத் துறையில் குறைவான சம்பளம்
உடம்பை உறிஞ்சும் அட்டையிடை வாசம்
கோம்பை சோழவந்தான் மேலக்கல் என்று
சோம்பல் ஏதுமின்றி கடினமாய் உழைத்தார்

நலம்விரும்பும் நண்பர்கள் யோசனை கேட்டு
சிலகாலம் சென்னை மாநகரில் தங்கி
முறையாக வரைவாளர் தொழிற்கல்வி தனையே
நிறைவாக ஐடிஐ தனிலே பயின்றார்

மாதச் செலவிற்கு உதவித்தொகை நாற்பது
பாதங்கள் நொந்தாலும் நடந்தே பயணம்
இரண்டு பேண்டு அரைகப் காபிஎன
திரட்டிய செல்வம் சிக்கனப் பாடம்

நன்மதிப்பெண் பெற்று நலமுடன் திரும்ப
மின்சார வாரியம் இருகரம் நீட்டிற்று
பற்றிய அக்கரம் ஓய்வு வயதுவரை
உற்ற துணையப்போல் உடனிருந்து உதவிற்று

ஒண்டுக் குடித்தனம் வைத்தார் மதுரையில்
கண்டிப்பாய் இருந்து குடும்பத்தை நடத்தி
இல்லத்தில் வறுமை எத்தனை இருப்பினும்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருந்தார்

கற்பினில் சீதையாம் கிருஹத்து லஷ்மியாம்
உற்ற துணையாம் சீதா லஷ்மியை
பாணிக் கிரஹணம் செய்து பெற்றனர்
மாணிக்கம் ஒன்றும் முத்துக்கள் மூன்றும்

செல்லப் பிள்ளைகள் மனைவி யுடனே
நெல்வேலி நகருக்கு மாற்றல் ஆனார்
கல்வி கேள்வியில் பிள்ளைகள் சிறக்க
நல்லற மாக இல்லறம் நடந்தது

அரசியல் ஆதாயம் கருதி வீணர்கள்
அரக்கியென அழைத்த ஹிந்தி அன்னையை
வீட்டினில் இருத்தி வாரிவாரி வழங்கி
நாட்டிற்கு நல்லதோர் சேவை செய்தார்

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்
கேட்டதுண்டு! இரண்டும் செய்து முடித்திட்டார்
இருநூற்றி இரண்டு புதிய காலனி
அருமை மாப்பிள்ளை அவர்தம் மைத்துனன்

இலவச மின்சாரம் சனிதோறும் ஒருபடம்
பலவசதி நிரம்பிய தெர்மல்நகர் வாசம்
ஹிந்தியின் அருளால் இரட்டை வருமானம்
எந்தக் கவலையும் இல்லா பொற்காலம்

அறிஞர்க ளாக மகன்களை ஆக்கி
பொறிஞர் கல்வி பயிலச் செய்தார்
முப்பெரும் தேவியரை மருமகள்க ளாக்கி
அப்பாவின் கடமையைத் தப்பாமல் செய்தார்

தந்தையின் மறைவை ஒருவாறு தாங்கி
அன்னையை அவரிரு கண்போல் காத்தார்
தாத்தாவாய் பதவி உயர்வு பெற்று
பேத்தி பேரனென விளையாடி மகிழ்ந்தார்

எந்த கவலையும் இனிமேல் இல்லைஎன
சொந்த வீட்டில் சொகுசாய் வாழ்ந்தவர்
ஆல மரமொன்று வேருடன் வீழ்ந்தார்போல்
காலனின் கருவியாம் இதயநோய்க்கு இறந்தார்

எந்த அவையிலும் முந்தி இருத்தியே
தந்தையின் உதவியை தவறாது நீசெய்தாய்
உந்தன் அருளால் இனிநான் செய்வதெல்லாம்
எந்நோற்றான் உந்தைஎன ஊருரைக்க வாழ்வதுவே.


பிகு:25-04-2008 அன்று இறைவனடி சேர்ந்த எனது தந்தையின் வாழ்க்கையை கவிதையில் சுருங்கச் சொல்லும் ஒரு சிறு முயற்சி.

6/15/08

தசாவதாரம் - பத்து கருத்துகள்

1. பன்னிரெண்டாம் நூற்றாண்டு கதை ஒரு அருமையான ட்ரைலர் போன்று இருந்தது. இதை வைத்து இதே ப்ரம்மாண்டத்துடன் ஒரு படம் எடுக்கவும். தயவு செய்து அசினை மட்டும் தூய தமிழில் பேசி நடிக்க வைக்க வேண்டாம்.
2. மேற்சொன்ன ட்ரைலர் படத்தில் ஏன் வந்தது ? மற்ற கதைக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லையே ? முக்கிய கதையில் ஒரு வேடம் குறைந்ததோ? Labல் செத்துப் போகும் குரங்கு வேஷம் போட்டிருக்கலாமே?
3. சில வேஷங்கள் மிகவும் செயற்கையாக இருந்தன - ஆனால் போகப்போகப் பழகி விட்டன.
4. 95 வயது பாட்டி பிரமாதம்.
5. ரஜினியைப் போல் ஜப்பானியர்களின் மனதில் இடம் பிடிக்கவோ என்னமோ - ஒரு ஜப்பானியர் வேடம். கடைசி சண்டை அருமை.
6. தெலுங்கர் வேடம் தெலுங்கர்கள் தமிழ் பேசுவதையும் - பொதுவாக அவர்களை கிண்டல் செய்து அதில் காமெடி கண்டது. ஹிந்தி படங்களில் தமிழர்களை கிண்டல் செய்யும்போது எனக்கு வரும் கோபம் தெலுங்கு பேசும் நண்பர்களுக்கு இந்த படம் பார்த்து ஏன் ஏற்படக் கூடாது என்று தோன்றியது. பஞ்சாபி வேடத்தில் இந்த ப்ரச்சனை இல்லை.
7. கேன்சருக்கு நல்ல treatment - குறி பார்த்து கேன்சர் இருக்கும் இடம் பார்த்து சுடுவது என்று இந்த படம் பார்த்து தெரிந்து கொண்டேன்.
8. மல்லிகா செராவத்தை இடைவேளைக்கு முன்பே கொன்றிருக்க வேண்டாம். கால்ஷீட் ப்ரச்சனையோ?
9. நல்லவேளையாக நாத்திக திணிப்புகள் அதிகம் இல்லை.
10. லட்சக்கணக்கான பேரை பலி வாங்கிய சுனாமி வராமல் இருந்தால் கோடிக் கணக்கான பேர் இறந்திருப்பார்களோ என்ற படைப்பாளனின் யோசனை வித்யாசமானது.

6/4/08

நன்னாரி சர்பத்

சென்ற வாரம் வீட்டிற்கு அருகில் உள்ள South Indian Speciality Storeக்கு போயிருந்தோம். அங்கு நன்னாரி சர்பத் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு. சிறு வயதில் திருச்சியில் விரும்பிக் குடித்த நியாபகம். கடைக்காரரும், அவர் கடைக்கு வரும் தமிழ் மக்கள் நன்னாரி சர்பத்தைப் பார்த்தவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு - மழைக் காலத்தில் சூடான வெங்காய பஜ்ஜியைப் பார்ப்பதற்கு உதாரணம் காட்டினார். என்ன ஓர் உதாரணம்.

வீட்டிற்கு வந்தவுடன் சுபாவை முதலில் சர்பத் செய்து தரச் சொன்னேன். பாட்டிலில் கொடுத்துள்ள அளவுகளைப் பயன்படுத்த Anti climax ஆக சுவை சுமாராகத்தான் இருந்தது. அடுத்த முறை தேவையான மாறுதல்களுக்குப் பின் அந்த சுவை கிடைத்தது. ஆகா.. என்ன ஒரு சுவை. இதோ ஒரு வாரம் கூட ஆகவில்லை - பாட்டில் காலி. அடுத்த முறை கடைக்குப் போகும்போது நாலைந்து வாங்கி stock பண்ண வேண்டும்.

உங்கள் வீட்டிற்கு அருகில் நன்னாரி சர்பத் கிடைக்கிறதா?

12/27/07

வேர்ட்ப்ரஸ்

என்னுடைய இந்த வலைப்பதிவும் வேர்ட்ப்ரஸ்ஸில் Mirror செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு, புது பதிவுகள் இரண்டு இடங்களிலும் இடம் பெறும். எந்த provider உங்களுக்குப் பிடித்திள்ளது என்று மறுமொழியிடவும்.