12/27/07

வேர்ட்ப்ரஸ்

என்னுடைய இந்த வலைப்பதிவும் வேர்ட்ப்ரஸ்ஸில் Mirror செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு, புது பதிவுகள் இரண்டு இடங்களிலும் இடம் பெறும். எந்த provider உங்களுக்குப் பிடித்திள்ளது என்று மறுமொழியிடவும்.

12/21/07

அண்ணா பல்கலைக்கழகமா - திரைப்பட நகரமா

.. என்று சந்தேகம் வரும் அளவு ஒரு காலத்தில் இருந்தது. நான் கல்லூரியில் இருந்தபோது ஒரு நாள் சன் தொலைக்காட்சியில் "ஒரு கைதியின் டைரி" படம் போட்டார்கள். கல்லூரி விடுதியில் உள்ள தொலைக்காட்சி அறையில் ஒரு பெரிய கூட்டமே கூடி பார்த்துக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரே விசில், கூச்சல். பார்த்தால் அண்ணா பல்கலைக்கழக Main buildingல் அடுத்த 10 நிமிடக் காட்சி எடுக்கப்பட்டிருந்தது. இதோ நம்ம main building entrance, அட இதோ நம்ம co-ops பக்கத்தில இருக்கும் மரப் படிக்கட்டு, இது நம்ம maths departmentஆ என்று ஒரே கூத்து தான். அதன் பின் பல பழைய (80s or 90s) படங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பார்த்து விட்டேன். அப்போதெல்லாம் court scene எடுப்பது எல்லாம் அங்குதான் போலும். உதாரணத்திற்கு நாயகன் படத்தின் இறுதிக் காட்சி.. அதில் காட்டப்படும் கோர்ட் அண்ணா பல்கலைக்கழக கட்டிடம் தான். ஆசை திரைப்படத்தில் சில காட்சிகள் கூட அங்கு எடுக்கப்பட்டது என்று கேள்வி. நல்லவேளையாக எனக்குத் தெரிந்தவரை சமீபத்தில் அங்கு திரைப்படங்கள் எடுக்கப்படுவதில்லை.

12/19/07

துறையூர் நினைவுகள் - வைரிச்செட்டிப்பாளையம்

இது நினைவுகள் வாரம் போலும்.

நேற்று மதியம் என் நீண்ட வருட நண்பன் மணியுடன் பேசிக்கொண்டு இருந்தேன். பேச்சு துறையூரில் பள்ளிப் பருவத்தில் நாங்கள் சேர்ந்து செய்த குறும்புகள், விளையாட்டுகள், பொதுவாக அந்த இனிய நாட்களைப் பற்றி சென்றது. அந்த இனிய நினைவிகளிலிருந்து ஒரு பகுதி. மற்ற பகுதிகள் இறைவன் கருணையுடன் விரைவில்..

துறையூர் - திருச்சியிலிருந்து 1 மணி நேர பஸ் பயண தூரத்தில் உள்ள ஊர். அதுவே எனது அம்மாவின் ஊர். எனவே பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு போய் விடுவது வழக்கம். சில வருடங்கள் எனது மாமா (திரு கிருஷ்ணமூர்த்தி) துறையூர் அருகே உள்ள வைரிச்செட்டிப்பாளையம் என்ற ஊரில் ஒரு வங்கியின் Managerஆக இருந்தார். நாங்கள் துறையூரில் இருக்கும் போது எங்களையும் வங்கிக்கு அழைத்துச் செல்வார். அங்கு அவருக்கு உதவியாக சில நேரங்களும் உபத்ரவையாக பல நேரங்களும் இருப்போம்.

அங்கு போகும் Team பற்றி சொல்லவில்லையே.. என்னைத் தவிர மேற்சொன்ன நண்பன் மணி மற்றும் எனது சித்தி மகன் ரமணா, சித்தி மகள் காயத்ரி, எனது இன்னொரு மாமா மகன் நாகராஜன், இன்னொரு மாமா மகன் ஆத்மா (இவன் கதை இன்னொரு நாள்).. யார் பெயராவது விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.

அங்கு நாங்கள் செய்யாத வேலைகளே இல்லை. ஒரு முறை ஒரு Ledgerக்கும் இன்னொரு Ledgerக்கும் Tally பண்ணும்போது ஒரு 10 பைசா இடித்தது. அதைக் கண்டுபிடிக்க 3-4 நாட்கள் ஆனது. எப்படி கண்டுபிடித்தோம் என்று கேட்காதீர்கள்.. நினைவில் உள்ள வரை இரண்டு Ledgerகளையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாக சரி பார்த்தோம்.

உதாரணத்திற்கு ஒன்று பார்த்தோம். வேண்டுமென்றால் பின்னர் மற்றவைகளைத் தருகிறேன். இப்போது உபத்திரவங்களுக்கு வருவோம்.

எங்களுக்குப் பிடித்த விளையாட்டு ஃபோன் விளையாட்டு. ஃபோன் எடுத்து ஏதாவது நம்பருக்கு அடிப்போம். யாராவது எடுத்தால் சில நிமிடங்களுக்குப் பேசவே மாட்டோம். எதிர் திசையில் hello hello என்று கத்திக் கொண்டிருப்பர். இல்லையென்றால் நாங்களும் hello hello என்று பல குரலில் பேசுவோம். யார் என்று கேட்டாலும் பதில் hello தான். Randomஆக ஃபோன் அடித்து போர் அடித்து துறையூரில் உள்ள எங்கள் தூரத்து உறவினர் வக்கீல் மாமாவிற்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தோம். அவரிடமும் அதே விளையாட்டு. இதில் கொடுமை என்னவென்றால் வக்கீல் மாமா வீட்டு மாடியில் தான் சாஸ்த்ரிகள் மாமா தங்கியிருந்தார். அங்கே வேதம் படிக்கப் போகும்போது வக்கீல் மாமா எங்களிடமே இப்படி வரும் ஃபோன் கால் பற்றிப் புலம்புவார்.

அங்கு ஒரு adding machine உண்டு. அதில் விளையாடுவது என்பது எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சில சமயம் உதவியாக ledger page total, adding machine மூலம் செய்வோம். பல முறை விளையாட்டிற்கு அதை உபயோகித்தோம். ஒரு முறை நாகராஜன் தனது ஆராய்ச்சிக்கு அதை உபயோகித்தான். சாதாரணமாக பேப்பர் செல்லும் இடத்தில் இரண்டாக மடித்து நுழைத்தான். அதுவும் அழகாக வெளியே வந்தது. பின் நான்காக மடித்து உள்ளே நுழைத்தான். அது எங்கோ போய் சிக்கிக் கொண்டது. அவ்வளவுதான்... கொஞ்ச நாட்களுக்கு அந்த adding machine உபயோகமில்லாமல் மூலையில் கிடந்தது. பின்னர் ஒரு விடாக்கொண்டர், சிக்கிய பேப்பரை வெளியே எடுக்க, எங்களது வேலை தொடர்ந்தது. என்ன.. நாகராஜனுக்கு மட்டும் adding machine பக்கம் வர தடா.

இந்தப் பதிவு நீளமாகி விட்டது.. எனவே வைரிச்செட்டிப்பாளையம் நினைவுகள் தொடரும்..

பி.கு: எழுத்துப்பிழைகள் முடிந்த வரை திருத்தப்பட்டன. கூத்தடித்த கூட்டம் விரிவாக்கப்பட்டது. சுட்டிக்காட்டிய ராஜப்பா மாமாவிற்கு நன்றி.

பி.கு2: மணி தனது நினைவுகளைப் பின்னூட்டத்தில் தந்துள்ளான். இங்கே படிக்கவும்.

பி.கு3: மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கரிகாலி கும்பலுக்காக புதிய வலைப்பதிவைத் துவக்கி இருக்கிறேன்.

12/18/07

கல்லூரி நினைவுகள் - GK

இன்று காலை வண்டியில் வந்துகொண்டிருந்த பொழுது என்னையும் அறியாமல் பாடிய பாட்டு - " உனக்கென்ன மேலே நின்றாய்". என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. ஆனால் இன்று இதைப் பாடும்போது நினைவிற்கு வந்தவன் GK என்ற G Karthikeyan - என்னுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவன். எங்கள் கல்லூரியில் ஒரு விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடினான். எங்கள் அனைவர் கண் முன்பும் சிம்லா ஸ்பெஷல் கமலை கொண்டுவந்து நிறுத்தியது அவனது நடனம்.

நடனம் என்றவுடன் Backstreet Boys உம் Michael Jacksonஉம் ஆடிய காலம் அது (இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை). அந்த குறுகிய வட்டத்திலிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை வைத்து ஆடினான் GK. அவன் முதன் முதல் கல்லூரியில் மேடை ஏறி ஆடியது ஒரு சந்திரபாபு பாடலுக்கு. சந்திரபாபுவின் பாணியை அப்படியே கையாண்டு ஆடுவது எளிதல்ல. அதை அழகாகக் கையாண்டு ஆடியது இன்றும் நினைவில் இருக்கிறது (Fresher's party??). இது எங்கள் துறைக்குள் நடந்த விழா. கல்லூரியே பார்க்க அவன் "என்னுயிரே" (உயிரே) பாடலுக்கு ஆடினான். ஆடிய அனைவருள்ளும் தமிழ் பாடலுக்கு ஆடியது இவன் ஒருவனே என்றால் பாருங்கள். முடிவை அறிவித்த நடுவர் இவனது நடனத்தை தனியாக புகழ்ந்தார் - எனினும் முதல் பரிசை இவனுக்குக் கொடுக்காமல் அநியாயம் செய்தனர். இருந்தபோதும் ஒவ்வொரு விழாவிலும் இவனது வித்தியாசமான நடனத்தைக் காண அவனுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் (அடியேனையும் சேர்த்து தான்).

இப்பொழுது எங்கு இருக்கிறான் என்று தெடியவில்லை. மேற்படிப்பு படிக்கும் போதும் அவனும், எங்களது இன்னொரு நண்பன் கார்த்திக்கும் சேர்ந்து நடனம் ஆடியது வரை தெரியும். அவனது திருமணத்திற்க்கும் செல்ல முடியவில்லை...

கல்லூரி நினைவுகளில் மூழ்கி நிற்கும்
-மகேஷ்