6/22/08

அப்பா

அதிசூர விநாயகர் அருள்கின்ற செங்கோட்டைப்
பதிவாழ் குளத்தையர் கோமதி தம்பதியர்
துதித்தார்கள் தெய்வத்தை பிள்ளை வரம்வேண்டி
உதித்தாரே உத்தமர்தான் ஆவணி அசுவதியில்

பூரணமாய் செல்வம் மணியான உள்ளம்
காரணமாய் வைத்தனரே ராஜாமணி நாமம்
வேலிபோல் மக்களைக் காக்கின்ற குணமறிந்தே
சாலிவா டீஸ்வரன் என்றழைத்து மகிழ்ந்தனரே

நடுநிசி ஆனாலும் பேரன் எதுகேட்பின்
சடுதியில் செய்துதரும் பாசமுள்ள பாட்டியுண்டு
அதிகாலை எழுந்து ஆலயம் சென்று
துதிபாடி மகிழும் நண்பர்கள் கூட்டமுண்டு

தந்தையும் அவரிரு தமையனும் சேர்ந்து
சொந்தமாய் செய்தனர் ஹோட்டல் வியாபாரம்
எழில்மிகு சேரநாட்டு செங்கோட்டையில் குடும்பம்
தொழிலோ பாண்டிநாட்டு சோழவந்தான் நகரம்

பதினைந்து வயதுவரை கவலையைக் கண்டதில்லை
விதியதன் விளையாட்டை வென்றவர் யாருமில்லை
எந்தஓர் தொழிலும் எடுபடாது குடும்பமே
சொந்த ஊர்விட்டு சோழவந்தான் சென்றதே

உணவகம் தொடங்கினர் கணேஷ பவனென்று
பணவரத்து ஆனால் முன்போல் இருக்கவில்லை
தந்தையின் பாரத்தை ஏற்கவே தனையனும்
அந்தசிறு வயதிலும் சிறிதும் தயங்கவில்லை

நெடுஞ்சாலைத் துறையில் குறைவான சம்பளம்
உடம்பை உறிஞ்சும் அட்டையிடை வாசம்
கோம்பை சோழவந்தான் மேலக்கல் என்று
சோம்பல் ஏதுமின்றி கடினமாய் உழைத்தார்

நலம்விரும்பும் நண்பர்கள் யோசனை கேட்டு
சிலகாலம் சென்னை மாநகரில் தங்கி
முறையாக வரைவாளர் தொழிற்கல்வி தனையே
நிறைவாக ஐடிஐ தனிலே பயின்றார்

மாதச் செலவிற்கு உதவித்தொகை நாற்பது
பாதங்கள் நொந்தாலும் நடந்தே பயணம்
இரண்டு பேண்டு அரைகப் காபிஎன
திரட்டிய செல்வம் சிக்கனப் பாடம்

நன்மதிப்பெண் பெற்று நலமுடன் திரும்ப
மின்சார வாரியம் இருகரம் நீட்டிற்று
பற்றிய அக்கரம் ஓய்வு வயதுவரை
உற்ற துணையப்போல் உடனிருந்து உதவிற்று

ஒண்டுக் குடித்தனம் வைத்தார் மதுரையில்
கண்டிப்பாய் இருந்து குடும்பத்தை நடத்தி
இல்லத்தில் வறுமை எத்தனை இருப்பினும்
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருந்தார்

கற்பினில் சீதையாம் கிருஹத்து லஷ்மியாம்
உற்ற துணையாம் சீதா லஷ்மியை
பாணிக் கிரஹணம் செய்து பெற்றனர்
மாணிக்கம் ஒன்றும் முத்துக்கள் மூன்றும்

செல்லப் பிள்ளைகள் மனைவி யுடனே
நெல்வேலி நகருக்கு மாற்றல் ஆனார்
கல்வி கேள்வியில் பிள்ளைகள் சிறக்க
நல்லற மாக இல்லறம் நடந்தது

அரசியல் ஆதாயம் கருதி வீணர்கள்
அரக்கியென அழைத்த ஹிந்தி அன்னையை
வீட்டினில் இருத்தி வாரிவாரி வழங்கி
நாட்டிற்கு நல்லதோர் சேவை செய்தார்

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்
கேட்டதுண்டு! இரண்டும் செய்து முடித்திட்டார்
இருநூற்றி இரண்டு புதிய காலனி
அருமை மாப்பிள்ளை அவர்தம் மைத்துனன்

இலவச மின்சாரம் சனிதோறும் ஒருபடம்
பலவசதி நிரம்பிய தெர்மல்நகர் வாசம்
ஹிந்தியின் அருளால் இரட்டை வருமானம்
எந்தக் கவலையும் இல்லா பொற்காலம்

அறிஞர்க ளாக மகன்களை ஆக்கி
பொறிஞர் கல்வி பயிலச் செய்தார்
முப்பெரும் தேவியரை மருமகள்க ளாக்கி
அப்பாவின் கடமையைத் தப்பாமல் செய்தார்

தந்தையின் மறைவை ஒருவாறு தாங்கி
அன்னையை அவரிரு கண்போல் காத்தார்
தாத்தாவாய் பதவி உயர்வு பெற்று
பேத்தி பேரனென விளையாடி மகிழ்ந்தார்

எந்த கவலையும் இனிமேல் இல்லைஎன
சொந்த வீட்டில் சொகுசாய் வாழ்ந்தவர்
ஆல மரமொன்று வேருடன் வீழ்ந்தார்போல்
காலனின் கருவியாம் இதயநோய்க்கு இறந்தார்

எந்த அவையிலும் முந்தி இருத்தியே
தந்தையின் உதவியை தவறாது நீசெய்தாய்
உந்தன் அருளால் இனிநான் செய்வதெல்லாம்
எந்நோற்றான் உந்தைஎன ஊருரைக்க வாழ்வதுவே.


பிகு:25-04-2008 அன்று இறைவனடி சேர்ந்த எனது தந்தையின் வாழ்க்கையை கவிதையில் சுருங்கச் சொல்லும் ஒரு சிறு முயற்சி.

3 comments:

SA Narayanan said...

அன்பு மகேஷ்,

சீரிய கவிதை. அருமை. உன் தந்தையைப் பற்றி பல விஷயங்களை அறிந்து கொண்டேன். உன் தாத்தா கணேஷ் பவன் ஹோட்டல் வைத்திருந்தார் என்பதும், உன் தந்தை draughtsman படிப்பு படித்தார் என்பதும் எனக்குப் புதிய செய்திகள்.

"பாதங்கள் நொந்தாலும் நடந்தே பயணம்","இரு பேண்ட் அரைக்கப் காபி" - இவை சென்ற தலைமுறையில் எல்லார் வீட்டிலும் இயல்பாக இருந்தவை என்றாலும், என் கண்களின் ஈரக்கசிவை துடைத்துக் கொண்டுதான் மேற்கொண்டு படிக்க முடிந்தது.

உன் தாய்-தந்தையின் ஆசிகள் உனக்கு எப்போதும் இருக்கும்

ராஜப்பா
11:05 ஜூன் 23, 2008

Unknown said...

நன்றி மாமா.

பொதுவாக தன் வாழ்க்கையைப் பற்றி அப்பா எங்களிடம் பகிர்ந்து கொண்டு இருந்தாலும், இதை எழுத முற்படும்போது சில புதிய தகவல்களை நானும் தெரிந்து கொண்டேன்.

Narayanasami Vijayaraghavan said...

'பாதங்கள் நொந்தாலும் நடந்தே பயணம்', ஆகாறு குறைந்தாலும் கலங்காமல் போகாறு குறைத்துக் கேடின்றி வாழ்தல், கோயில் நகரங்களில் இறையச்சமும் கலாச்சாரமும் பொருந்திய வாழ்க்கை, தந்தை தாய்ப்பேணல், பங்காளிப் பெருமக்கள், செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருத்தல், இவையெல்லாம் மாநகரங்களிலும், மாமாநகரங்களிலும் அடுக்ககங்களில் வளரும் நம் பிள்ளைகளுக்குக் கல்கியில் பொன்னியின் செல்வன் படித்த மாதிரிதான். அந்த வகையில் உன் தந்தையைப் பற்றிய உனது பதிவுகள் அடுத்த தலைமுறைக்கு வரலாறு. சுகோஷ்களின் சார்பில் பாராட்டுக்கள்.


வி. நாராயணசாமி